திருவனந்தபுரம்:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், இரண்டு வாரங்களில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. குறிப்பாக இந்தியாவில் கடந்த வாரம் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் 415 பேருக்கு உறுதியாகி உள்ளது.
இதனால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மூன்று மடங்கு வேகமாக பரவும்
ஒமைக்ரான் தொற்று மற்ற வேரியன்டுகளை விட மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை நிருபிக்கும் வகையில், இந்தியாவில் அதிவேகமாக பரவிவருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் அடுத்த 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படலாம் என்று கேரளா மாநில கரோனா நிபுணர் குழு உறுப்பினரும் மருத்துவருமான டிஎஸ் அனிஷ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை பதிவானா ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை, வீரியத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த 2-3 வாரங்களில் தொற்று எண்ணிக்கை 1,000ஆகவும், 2 மாதங்களில் 10 லட்சமாகவும் அதிகரிக்கக்கூடும்.
எனவே மத்திய அரசு, மாநில அரசுகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்களும் முகக் கவசம், சமூக இடைவெளி, கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மற்ற வேரியன்டுகளை விட ஒமைக்ரான் தொற்று குறைந்த பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரவி உருமாற்றம் அடைந்து ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும்போது, பாதிப்புகள் தீவிரமாகலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Omicron in India: இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் - தற்போதைய நிலை என்ன?