ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலம், பலோட்(balod) மாவட்டத்தில் உள்ள ஜகர்தா(jagatra) அருகே புதன்கிழமை இரவு லாரி மீது பொலிரோ கார் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பலோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜித்தேந்தர் குமார் யாதவ் கூறிய தகவலின் படி, சரக்கு லாரி - பொலிரோ கார் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பெண் ஒருவர் ராய்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறை தேடி வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,"குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்த செய்து பெரும் வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல், விபத்தில் படுகாயமடைந்த பெண் விரைவில் குணமடைய வேண்டுகிறேன், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கிய நபர்கள் பலோத்கஹான் என்ற பகுதிக்கு திருமண நிகழ்வுக்கு சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பி.டி. உஷா சந்திப்பு - நடந்தது குறித்து விளக்கம்!