ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகி உள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்தன் கோஹ்லி கூறியதாவது, "பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து, ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்து, கட்ரா பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் உள்ள பாலத்தை கடக்கும் போதும் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணியில், காவல் துறையுடன் இணைந்து சிஆர்பிஎப், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.