ஒரு வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை; மனு ஒப்புகை சீட்டுகளால் மாலை அணிந்து ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயி!
Published : Feb 20, 2024, 12:04 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி குப்பம், பி.என் பாளையம் ஊராட்சி, குக்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயம் செய்து வரும் இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள அனுப்பேரி ஏரியைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கடந்த ஒரு வருட காலமாக வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தான் அளித்த மனுக்களின் ஒப்புகைச் சீட்டுக்களைச் சேர்த்து மாலையாகக் கோர்த்து, அதைக் கழுத்தில் அணிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (பிப்.19) மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், “நான் வசிக்கும் பகுதியில் உள்ள நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதற்காக நான் ஒரு வருடமாக மனுக்களைத் தபால் மூலமாகவும், நேரிடையாகவும் அளித்துள்ளேன். ஆனால் அரசு அதிகாரிகள், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்கள். அதனால் மனு ஒப்புகை சீட்டுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மாலையாக அணிந்து வந்துள்ளேன். இனியாவது எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.