சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!
Published : Feb 18, 2024, 7:03 AM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆசனூர் அருகே உள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு கரடிகள், தேசிய நெடுஞ்சாலையில் அங்கும், இங்கும் நடமாடின. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் பகல் நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், வனவிலங்குகளைக் கண்டால் அருகில் சென்று புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.