வேலூர்:சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விசாரணையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கொல்லைமேடு துருவம் பகுதி உள்ளது. இது தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதியில், சிவலிங்கம் - வளர்மதி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருந்த நிலையில், நால்வருக்கு மட்டும் திருமணம் முடிந்து, ஐந்தாவது மகள் அஞ்சலி (22) கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சலி நேற்று (டிசம்பர் 18) புதன்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டின் பின்புற பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அருகில் உள்ள காப்புக்காட்டின் புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அஞ்சலி மீது பாய்ந்து தாக்கியுள்ளது. சிறுத்தை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், பொதுமக்கள் வருவதற்குள் சிறுத்தை அஞ்சலியை வீட்டிலிருந்து நூறு அடி தொலைவில் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
உயிரிழந்த பெண் அஞ்சலி (ETV Bharat Tamil Nadu) அஞ்சலியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அதற்குள் சிறுத்தை அஞ்சலியின் உடலை விட்டுவிட்டு பயந்து ஓடிய நிலையில், இறந்த நிலையில் இருந்த அஞ்சலியின் உடலை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க:குடியிருப்புக்குள் உலா வந்த ஒற்றை கரடி; அச்சத்தில் பொதுமக்கள்!
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா, குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கே.வி.குப்பம் காவல் துறையினர், உயிரிழந்த அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர்.
உறவினர்கள் போராட்டம்:
ஆனால், அஞ்சலியின் உடலை ஒப்படைக்க மறுத்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், தங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனை உடனடியாக செய்துகொடுத்தால் மட்டுமே உடலை ஒப்படைப்போம் என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள் (ETV Bharat Tamil Nadu) நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரோன் உதவியுடன் இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்மக்கள் கோரிக்கை:
பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.