விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திப்பதற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இடையே இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இக்கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உள்ளது.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதைப் பூர்த்தி செய்யவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்"என்றார்.
இதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,"தமிழ்நாட்டின் தனிப் பெரும் சக்தியாக இருக்கக்கூடிய பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் பாமக, மிகவும் முக்கியமான ஒரு முடிவை எடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.