சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் கொடுக்க வேண்டிய ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், கடந்த 20 நாட்களாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், பல்கலைக்கழகத்தின் வருமான வரி கணக்குகள் சரியாக தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்துள்ளதாகவும், அது குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டும் முறையான பதில்கள் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில், இன்று (மார்ச் 1) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினர். இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கூறும்போது, "சென்னை பல்கலைக்கழகத்திற்கு, தமிழ்நாடு அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மானிய நிதியை வழங்கவில்லை.
தணிக்கை அறிக்கையை காரணம் காட்டி, நிதி வழங்காமல் உள்ளது. இதனால் அரசிடம் இருந்து வர வேண்டிய மானியத் தொகையை அளிக்காமல் உள்ளது. தணிக்கையில் உள்ள குறைபாடுகளை காரணம் காட்டி, வருமான வரித்துறையினர் 37 வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.
இதனால் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் என அனைவருக்கும் பிப்ரவரி மாத துவக்கத்தில் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தணிக்கை துறையின் குறைபாடுகள் கடந்த 5 ஆண்டுகளாக இல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறோம்.