சென்னை:ஊரக வளர்ச்சி துறையின், ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனம் ( TN -RISE ) தொடக்க விழா சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு TN-RISE இலட்சினை மற்றும் www.tnrise.in எனும் இணையதளத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெண்கள் முன்னேற்றம் அடையாமல் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்கள் வளர்ச்சி குறித்து யோசிக்காத போது பெண்களைப் பற்றி யோசித்தது தமிழ்நாடு. அதனை யோசித்தவர் பெரியார். மகளிர் வேலைக்குச் செல்கிறார்கள் என்ற நிலையை மாற்றி, தொழில் முனைவோராக உருவாக்கிட இந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. மகளிருக்கு உறுதுணையாக இந்த TN-RISE நிறுவனம் இருக்கும். தொழில் செய்வதற்கு ஏற்ற நவீன கட்டமைப்புடன் இந்த நிறுவனம் இருக்கும். மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகள் அனைத்தையும் செய்யவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்களிடம் இந்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது. மகளிர் தேவைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து, உலக அளவில் தொழிலதிபர்களாக உருவாக்கும் முயற்சியில் TN RISE நிறுவனம் இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க பாடுபடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரி - விவசாயிகள் இடையே வாக்குவாதம்!