நாகப்பட்டினம்:தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 1991 இல் உருவாக்கப்பட்ட நாகை மாவட்டம் சோழ மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழி்ல்கள் மாவட்ட பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன் பிடித்தல், உலர்மீன் விற்பனை போன்ற கடல்சார் தொழில்களும், இறால் பண்ணைகளும் நிறைந்த மாவட்டமாக நாகை உள்ளது.
தொகுதிகள்: நாகை நாடாளுமன்ற தனித் தொகுதி நன்னிலம், திருவாரூர், திருத்துறைபூண்டி (தனி), நாகப்பட்டினம், வேதராண்யம், கீழ்வேளூர்(தனி) ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த 1957 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இத்தொகுதியில் நடைபெற்றுள்ள 17 நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்குகளை அள்ளிய கம்யூனிஸ்ட்:2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆண் வாக்காளர்கள் 6,42,863, பெண் வேட்பாளர்கள் 6,60,157, மூன்றாம் பாலினத்தவர் 40 பேர் என் மொத்தம் 13,03,060 வாக்களாளர்கள் இருந்த நிலையில், மொத்தம் 10,02,208 வாக்குகள் (78.3%) பதிவாகின.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மறைந்த எம்.செல்வராஜ் 5,22,892 வாக்குகள் பெற்று 2,11,353 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சரவணன் 3,11,539 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் செங்கொடி 70,307 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 51,448 வாக்குகளும் பெற்றனர்.
2024 இல் குறைந்த வாக்குப்பதிவு:கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது, இத்தொகுதியில் மொத்தம் 13,45,120 வாக்காளர்கள் உள்ள நிலையில் (ஆண் வாக்காளர்கள் 6,57,857, பெண் வாக்காளர்கள் 6,87,181, மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர்) மொத்தம் 9,67,694 வாக்குகள் (71.94%) பதிவாகி உள்ளன.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தலைவர்கள் பிரச்சாரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ்ஜை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருமந் பிரச்சாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக சார்பில் போட்டியிடும் ரமேஷுக்கு ஆதரவாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?:நாகப்பட்டினம் தொகுதியில் இதுவரை கம்யூனிஸ்ட் கட்சியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக அக்கட்சி தற்போது அங்கம் வகிக்கும் திமுக வெற்றி கண்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், இந்தத் தேர்தலிலும், திமுக கூட்டணியில் அக்கட்சிக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி vs அதிமுக என இருமுனைப் போட்டி நிலவும் நாகப்பட்டினம் தொகுதியில் இம்முறை வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு ஜுன் 4 ஆம் தேதி விடை தெரிந்துவிடும்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: வீடியோ சர்ச்சையால் மாற்றப்பட்ட திமுக வேட்பாளர்; நாமக்கலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - LOK SABHA ELECTION 2024