சென்னை: மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புறப்பாடு விமானங்கள் ரத்து
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.35 மணிக்கு, சிலிகுரி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 1.55 மணிக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் நகர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து
அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய விமானங்களான காலை 10.20 மணிக்கு கொச்சி ஸ்பைஸ் ஜெட் விமானம், பகல் 1.45 மணிக்கு திருவனந்தபுரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 3 மணிக்கு மதுரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.10 மணிக்கு யாழ்ப்பாணம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.55 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா ஸ்பைஜெட் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த 13 விமானங்களில் கொச்சி, திருவனந்தபுரம், சிவமுகா, சிலிகுரி, கொல்கத்தா உள்ளிட்ட 9 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை 2 விமானங்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் 2 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.