ராதிகா சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் விருதுநகர்:விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும்.
விருதுநகருக்கும் - டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடி தான் என உறுதியாகக் கூறுகின்றனர். 400 -க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்.பியாக நாடளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த தொகுதியில் என்ன பணிகள் செய்ய வேண்டும் என உள்ளூர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
நான் வெற்றி பெற்ற பின்னர் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். இப்பகுதியின் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பிரச்சினையை தீர்க்க கோரிக்கை வைத்தனர்.
அவர் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக் கூறி இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கச் செய்தார். அதனால் தற்போது லைட்டர் விற்பனை முடக்கியது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்போது சிவகாசி தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப் படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் இவ்வளவு நாள், நான் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை.
முதல் முறையாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். பாஜக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். திமுக, அதிமுக கூட்டணியில் யாரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள்.
யாருக்காக இவர்கள் இரண்டு பேரும் ஓட்டு கேட்கின்றனர்? எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சனைகளை தீர்க்கும் என்கிறார். அவர் யாரை சந்திப்பார்? யாரிடம் முறையிடுவார்? ஏற்கனவே டெல்லியில் அவர் சுவிட் ஆஃப், மாநிலத்தில் பீஸ் அவுட்..உங்களால் என்ன செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:லோக்சபா தேர்தலில் வெற்றி யாருக்கு? - 2026 தேர்தல் ரேஸில் முந்துவது யார்? - கள ஆய்வு முடிவுகள்!