தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வேட்டியை மடித்துக் கட்டி ஆடாதே".. பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் - மதுரை அருகே கொடூரம்! - ASSAULTED ON SCHEDULE CASTE BOY

உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பட்டியலின சிறுவனை ஒருமையில் திட்டி, தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உசிலம்பட்டி காவல் நிலையம்
உசிலம்பட்டி காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 11:48 AM IST

மதுரை:உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது, வேட்டியை மடித்துக் கட்டி நடனமாடியதாகப் பட்டியலின சிறுவனை தாக்கி, ஆறு வயது சிறுவன் காலில் விழ வைத்த கொடூர சம்பவம் தொடர்பாக தற்போது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன.20) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அப்பகுதியைச் சேர்ந்த பார்வதி அம்மன் கோயில் தெருவில் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவில் கிராம சிறுவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார்.

வேட்டியை மடித்துக் கட்டியதால் தாக்குதல்:

அப்போது, அங்கிருந்தவர்கள் சிலர் அவரது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி வேட்டியை மடித்துக் கட்டி ஆடாதே எனத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறுவன் மதுரைக்குச் சென்று தனது தந்தையின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

அப்போது தகராற்றில் ஈடுபட்ட தரப்பினர் சிறுவனைத் தேடியுள்ளனர். சில நாட்களாக தேடிக் காணவில்லை எனத் தெரிந்தவுடன் பிரச்சனையைப் பேசி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறுவன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

முன் பகை காரணமாக, ஜனவரி 16ஆம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், பிரம்மா, சந்தோஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேரும் கோயில் திருவிழாவின்போது, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடனமாடியதற்காக பட்டியலின சிறுவனை கடத்திச் சென்று ஊர் அருகே உள்ள முத்தையா கோயிலில் வைத்து தாக்கியதுடன், ஆறு வயது சிறுவன் காலில் விழ வைத்தும் அங்கிருந்த அனைவரின் காலிலும் விழவைத்ததாகவும், அதுமட்டுமின்றி, சாதிப் பெயரை இழிவாகச் சொல்லச் சொல்லியும் திட்டியதாகவும், மீண்டும் ஊர் பக்கம் வந்தால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் எனவும் மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அதனால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், பாதுகாப்பு கேட்டு உசிலம்பட்டி நகர காவல் நிலையத்தில் சார் ஆய்வாளர் முருகராஜிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் 256(b), 351(2), Sc-St act 3. (1) (r), 3. (1) (S) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜன.20) 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், உக்கிர பாண்டியன், நித்தீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கந்து வட்டி கடனால் இளைஞர் தற்கொலை.. அதிக வட்டிக்கு பணம் கொடுத்த இருவர் கைது!

இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?:

இந்த நிலையில், இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தளத்தில் மிக தாமதமாக இந்த வழக்கைப் பதிவு செய்ததைக் கண்டித்து உள்ளதுடன், இது தொடர்புடைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளது. அதில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுவனை கடந்த 16-ஆம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ் மற்றும் இரு சிறுவர்கள் சேர்ந்து மது வாங்கச் சொல்லி கட்டாயப் படுத்திருந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக அச்சிறுவனை ஒருமையில் திட்டி கொடுமைப் படுத்திய பேரவலம் நடந்துள்ளது.

ஆனால், கடந்த மூன்று நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத நிலையில் 18-ஆம் தேதி வழக்கறிஞர் சி.கா.தெய்வா, விசிக பெண் நிர்வாகிகள் சேர்ந்து உசிலம்பட்டி DSP-யை சந்தித்து அழுத்தம் கொடுத்த பின்பு உசிலம்பட்டி நகர் காவல்நிலைய குற்ற எண்: 26/2025- SCST வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இன்று வரை ஒரு குற்றவாளிகளைக் கூட கைது செய்யப்படவில்லை ஏன்? மாவட்ட ஆட்சியர், தலித் மக்கள் பிரச்சனையில் மெத்தனமாக உள்ளதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக நடந்தேறி வரும் சாதிய தீண்டாமை பிரச்சனைக்குச் சரியான தீர்வு இனியாவது காணப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details