சென்னை:கர்நாடக மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இதில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்த போது, அதில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் முசாவீர் சாஹிப், அப்துல் மதீன் தாஹா என தெரிய வந்தது. மேலும், பெங்களூரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கொல்கத்தாவில் வைத்து இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டியதாகவும், இவர்களுக்கு சென்னையில் சிலர் உதவி செய்ததாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.