சென்னை:கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) மற்றும் மீனவர்களுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒட்டுமொத்த மீனவர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து நெய்தல் மக்கள் கட்சி தலைவர் பாரதி, ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பு ஆணை (CRZ -Costal regulation zone) 1991-ல் உருவாக்கப்பட்டது. இது கடற்கரையில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களாகும்.
இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்(Costal zone management plan) 1996 கொண்டுவரப்பட்டது. 2011-ல் இந்த கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மீனவ மக்களுக்கு முரணான திட்டங்களை கொண்டிருந்தது. அதை திருத்தம் செய்து 2019-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டலம், 12 கடலோர மாவட்டங்களில் கருத்து கேட்டு புதிய திட்டங்களை வகுத்தனர்.
பாரம்பரியமாக இருக்கக்கூடிய மீனவ கிராமங்கள், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடத்தில் இருக்க வேண்டும். மேலும், பொதுவாக இருக்க கூடிய இடங்கள், மீன் பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றை அடையாளபடுத்த வேண்டும். ஆனால், அந்த வரைபடத்தில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 608 மீனவ கிராமங்கள் உள்ளன.
ஆனால், இந்த வரைபடத்தில் 50க்கும் குறைவான கிராமங்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. மற்ற கிராமங்களின் பெயர்கள் வரைபடத்தில் இல்லை. வெறும் வெற்றி வரைபடமாக உள்ளது. இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் CRZ 2019 விதிகளின் படி,வரைபடம் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.