சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறையின் பங்களிப்போர் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் கோபால் உள்ளிட்ட உயர்கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். உயர்கல்வியை மேம்படுத்துவது மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்ளிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், "தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை என நான்கு மண்டலமாக பிரித்து உயர்கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து நிலையிலான மாணவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் 4 மண்டலங்களில் நடத்தி உள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வியியல், பொறியியல் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் என அரசுத் திட்டங்களில் பயன்பெறுபவர்கள் என அனைவரிடமும் கருத்துக்கேட்ட பிறகு உயர்கல்வித் துறை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறோம். பாடம் நடத்தும் முறை புரியவில்லை, ஆசிரியர்கள் மாறி, மாறி வகுப்புகள் எடுப்பதால் பாடம் சரிவர புரியவில்லை, பயிற்சி மொழி என பல விஷயங்களில் மாறுபடுவதாக மாணவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும், கோயம்புத்தூரில் இருந்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்று விக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் தான் கற்பிக்கின்றனர். எனவே தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடம் நடத்தினால் மொழி சார்ந்த மேம்பாடு இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
பயிற்சிக்காக கல்லூரி மாணவர்கள் நிறுவனங்களுக்கு செல்லும்போது மாணவர்கள் மற்றும் பயிற்றுநருக்கு இடையில் இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியை சரி செய்வதற்கான கருத்துக்களும் தற்போது கேட்கப்படுகிறது. தகுதி வாய்ந்த மாணவர்கள் வேண்டும் என நிறுவனங்கள் தெரிவிக்கக்கூடிய நிலையும் உள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஒற்றை எண்ணமாக இருக்கிறது.
இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுத்து புதிய பாடமா அல்லது புதிய பாடப்பிரிவில் பாடங்கள் சேர்க்கப்படுமா அல்லது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் முடிவு செய்து வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் அதற்கேற்ற பாடங்களை இணைத்து உயர்கல்வியை உச்சத்திற்கு எடுத்து செல்வோம்.