தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பதாக வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Election Commission of India: சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க கோரிய வழக்கில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu (File Image))

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 2:08 PM IST

Updated : Jun 3, 2024, 2:25 PM IST

சென்னை: சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனூர் மகிமைதாஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை. வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் மக்களை பிரித்தாளுகின்றனர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

தொடர்ந்து, தேர்தல் நேரங்களில் சாதி, மத, மொழி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கைகளை தடுக்க எந்த ஒழுங்குமுறையும் இல்லை என்பதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தூதர்களை நியமித்து, மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இம்மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க:அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு! - Toll Gate Price Increase

Last Updated : Jun 3, 2024, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details