தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! - SENTHIL BALAJI CASE

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2025, 1:16 PM IST

சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைக்காமல் தனி தனியாக விசாரிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றமும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை., விவகாரம்: மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய ஞானசேகரன் தாயார் மனு!

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது. இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை இணைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details