மயிலாடுதுறை: இந்திய வானிலை மையம் நாளை (நவ.26) முதல் வியாழக்கிழமை (நவ.28) வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 தானியங்கி மழைமானி மையம், 3 தானியங்கி வானிலை மையம் மற்றும் 6 மழைமானி உள்ளது. 19 விஎச்எப்-ஒயர்லாம் செயல்பாட்டில் உள்ளது. சாட்டிலைட் போன் தயார் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் பருவமழை காலங்களில் சுழற்சி முறையில் அனைத்து துறை அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை கருவிகள்: 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், 362 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 146 திருமண மண்டபம், 68 சமுதாய கூடம் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 33 இடங்கள், குறைந்த அளவு பாதிக்கக்கூடிய இடங்களாக 80 இடங்கள், மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்களாக 76 இடங்கள் என மொத்தம் 201 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, மொத்தம் 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் 85 ஜெசிபி, 164 ஜெனரேட்டர்கள், 57 பவர் சா, 31 ஹிட்டாச்சி, 40351 ஆயில் என்ஜின்கள் மணல் மூட்டைகள், 84 மரம் அறுக்கும் கருவிகள், 34110 சவுக்கு கம்பங்கள், 5870 கிலோ பிளிச்சிங் பவுடர் ஆகியன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.