தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயக்க பணியாளர்கள் நியமனம் வழக்கு - நீதிபதிகள் அதிரடி கேள்வி! - ULTRASOUND SCAN CASE MADURAI

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயக்க பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், சுகாதாரத்துறை பதில் அளிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2025, 3:29 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) இயக்க பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், போதிய பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், பொது மருத்துவ இயக்குநரகத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயக்குவதற்கான பணியாளர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பல கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கி அதனை இயக்குவதற்கு உரிய பணியாள்கள் நியமனம் செய்யாவிட்டால் அதன் பயன் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு, “மதுரை மாவட்டத்தில் 13 பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் நலம் போன்ற முக்கியமான பணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே செய்யப்படுகின்றன. எனவே, இங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மிகவும் முக்கியமானது.

ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இல்லாததால், கர்ப்பிணிகள் நெடுந்தொலைவு பயணித்து மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புற கர்ப்பிணிகள் பொருளாதாரரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆரம்ப சுகாதார மையங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்பது விதி.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆனால், பெரும்பாலான அல்ட்ரா சவுண்ட் இயந்திரங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. ஆகவே, மதுரையில் உள்ள கள்ளந்திரி, சமயநல்லூர் உள்ளிட்ட 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள் தரமான முறையில் இயங்குவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "செக்கானூரணி பகுதியை தவிர மற்ற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி உள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணி அமர்த்துவதற்காகவே காத்திருக்கும் நிலை உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் தகவல் அறியும் உரிமை விதியின்கீழ், 13 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 13 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை இயக்குவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து இயந்திரங்கள் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளனர். ஆனால், இயந்திரங்களை இயக்க நபர்கள் இல்லையெனில் அதனால் என்ன பயன்? போதிய நபர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கும் உபகரணங்கள் முறையாக இயக்கப்படவில்லை எனில் எப்படி எடுத்துக் கொள்வது? என கேள்வி எழுப்பி நீதிபதிகள், தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் பொது மருத்துவ இயக்குனரகத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details