தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் மர்ம மரண விவகாரம்: இழப்பீடு கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - VEERAPPAN RELATIVE DEATH CASE

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் இறந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதற்கு இழப்பீடு கோரி அவரது மகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க இயலாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2025, 3:41 PM IST

சென்னை:சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினரின் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் விசாரணக்கு அழைத்து செல்லபட்டார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதற்கிடையில் தர்மபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அர்ஜூனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சதிஷ்குமார் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் தந்தை உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? என்பதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். எப்படி, எங்கே உயிரிழந்தார் என்பதை தெரிவிக்காமல் அர்ஜூனன் இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர் இறந்துவிட்டார் என்றால் அவரது உடல் எங்கே?' என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல் துறையினரின் சித்ரவதை காரணமாக தான் அர்ஜுனன் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், உரிய ஆதாரங்களை சேகரித்து, இழப்பீடு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details