சென்னை: கோவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள சாய்பாபா வித்தியாலயம் அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி மாணவர்களைச் சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராகச் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பிரதமர் நிகழ்ச்சி காரணமாக மாணவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லும் படி பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்குச் சென்றதாகவும், அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு மற்றும் காவல்துறை தரப்பில், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின் புகார் அளிக்கப்பட்டதாகவும், பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும், அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை எனவும், ஆனால் அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு என தெரிவிக்கப்பட்டது.