சென்னை: கடந்த 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.பி.பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 1998 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடிக்கு எதிரான இந்த வழக்கை விழுப்புரம் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.
பரமசிவத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பரமசிவம் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.