தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், இன்று(ஏப்.2) மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு, வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகன பேரணியுடன் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, "டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன தேசத் துரோகியா? தேச குற்றவாளியா? வெளிநாடுகளுக்குத் தப்பியோடி தலைமறைவாகவோ, அல்லது அண்டை நாடுகளைத் தஞ்சம் அடைபவரா என்று கேள்வி எழுப்பினார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜனநாயகத்தைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சுதந்திரமான அமைப்புகளைச் சிறைப்படுத்தி, அதன் பணியாளர்களை தங்கள் பணியாளர்களாக மாற்றி வருகிறது. அது தான் மிகப்பெரிய பிரச்சனை. அதற்கு எதிராகக் கொள்கை ரீதியாக அமைந்தது தான் இந்த இந்தியா கூட்டணி.