மதுரை: சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வேலாயுத ரஸ்தா சாலை பகுதியில் வி.எஸ்.வி நகர் அமைந்துள்ளது. இது நகர் மற்றும் பஞ்சாயத்து திட்டமிடல் இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட, முறையான அனுமதியுடன் உள்ள இடம்.
அதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமூக நலப் பயன்பாட்டிற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டு முறையான லே அவுட்டுடன் அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் தற்போது சிவகாசி துணைப் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவது தெரியவந்துள்ளது.
பொதுப் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் பதிவுத்துறை சார்பில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இது நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணாக உள்ளது. ஆகவே, விருதுநகர் மாவட்டம் சிவகாசி வி.எஸ்.வி நகர் குடியிருப்பு பகுதியில் சமூக நலப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பத்திரப்பதிவு துறை சார்பில் பயன்படுத்தத் தடை விதிப்பதோடு, அந்த இடத்தை சமூக நல நிகழ்வுகளுக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, சிவகாசி வி.எஸ்.வி நகரில், சமூக நல நிகழ்வுகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு தொடர்பாக நகரத் திட்டமிடல் துறை இயக்குநர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:ஜாபர் சாதிக் விவகாரம்: மத்திய போதைப் பொருள் அதிகாரிகளுக்கு இயக்குநர் அமீர் கடிதம்!