சென்னை:சென்னை பெரவள்ளூர் ஏ.கே.சி கார்டன் 6வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (40). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், லோகேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ராஜலக்ஷ்மி (36) என்ற பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 9ஆம் தேதி சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது.
இதையடுத்து, மணமக்கள் குடும்பத்துடன் சென்னை பெரவள்ளூரில் உள்ள லோகேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அன்றைய தினம் புது தம்பதி அறையில் இருந்தபோது, லோகேஷுக்கு திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி குடும்பத்தாரை அழைத்துள்ளார். பின்னர், உடனடியாக அவர்கள் லோகேஷை மீட்டு ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, வரும் வழியிலேயே லோகேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.