தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2,553 மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்! - மருத்துவ காலிப்பணியிடங்கள்

தமிழ்நாட்டில் 500 இடங்களில் நல்வாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 2:13 PM IST

சென்னை: மாநில அளவிலான அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், நேற்று (நவ.15) நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துக்கொண்டு பேசியதாவது, “2021 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி, சாமனப்பள்ளியில் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இன்று வரை 1.90 கோடி பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். சமீபத்தில் ஐநா சபை பொதுக்கூட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, United Nation - Inter agency Task force Award 2024 வழங்கியுள்ளது.

மகப்பேறு மரண விகிதம்: மகப்பேறு மரண விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடந்த 2023 -24 நிதியாண்டில் 45.5 சதவீதம் என்ற அளவில் குறைந்ததுள்ளது. இந்த விகிதம் 2024-25ஆம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரையில், 39.4 சதவீதம் என்ற விகிதத்தில் மேலும் குறைந்துள்ளது.

குழந்தை மரண விகிதம்: குழந்தை மரண விகிதம் 2022-23 ஆம் ஆண்டில், 10.2 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த விகிதம் 2024-25 ஆம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரையில், 7.7 சதவீதம் என்ற விகிதத்தில் மேலும் குறைந்துள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டொன்றிற்கு 7 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இந்த ஆண்டு இதுவரையில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 843 பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மோசடி சம்பவம்: புதுக்கோட்டை, களியாப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார கணக்கு உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் இணைந்து, போலியாக நபர்களை தேர்ந்தெடுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவியினை, தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்து ரூ.18.60 லட்சம் ஏமாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு..அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

காலிப்பணியிடங்கள்: அரசுப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், மாவட்ட சுகாதார நலவாழ்வு மையம் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 460 பேர். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் 1,353 மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. 2026 ஆண்டு வரை கணக்கெடுத்து 1,200 மருத்துவர் காலிப்பணியிடங்கள் சேர்த்து 2 ஆயிரத்து 553 மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பிக்க பெறப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிகள் நிரப்பப்பட உள்ளது.

மேலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் மற்றும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்புவற்கும் உரிய நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 1,066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரத்து 250 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நலவாழ்வு மையங்கள்: மொகிலா ஆம் ஆத்மி கிளினிக் என்று சொல்லக்கூடிய மருத்துவக் கட்டமைப்புகளை தமிழ்நாட்டில் 708 இடங்களில் அமைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில், தமிழ்நாட்டில் 500 இடங்களில் நலவாழ்வு மையங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவர், செவிலியர், உதவியாளர்,சுகாதார பணியாளர் என ஒரு நலவாழ்வு மையத்திற்கு 4 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details