சென்னை:2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்.12 ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிப்பின்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணாமல், குழு அமைப்பதாக திமுக அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை சுமார் 52 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த குழு கொடுத்த அறிக்கை என்ன, குழு அளித்த அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய அவை முன்னவர் துரை முருகன், “குழு அமைக்காத அரசே கிடையாது. மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அடிமட்ட அளவில் இருந்து பார்க்க வேண்டும். இது போன்ற சூழல் உள்ளதால் குழுக்கள் அமைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, ”திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தை கடன் மாநிலமாக ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற போதெல்லாம் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதாகவும், 2010- 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை விட்டுப் போகும் பொழுது சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு கடன் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றதாக” கூறினார்.
இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் “எதிர்க்கட்சி தலைவர் கூறிய 2006-11 கால கட்டத்தில் தான் தமிழக மக்களுக்கு 2 கோடி நபர்களுக்கு இலவச கலைஞர் தொலைக்காட்சி மற்றும் ரூ.7000 கோடிக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்குக் கடன் பளு என்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருந்ததால் அப்போதைய மறைந்த முதல்வர் கருணாநிதி முன்னெடுப்பால் விவசாயக் கடன் ரூ.7000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
அது மட்டுமல்லாது தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் 82 இலட்சம் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்ட ஆண்டும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட 2006-11 காலகட்டத்தில்தான். நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் தி.மு.க எந்த ஒரு வீண் செலவுகளை செய்யவில்லை, மக்களுக்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் கடன் வாங்கிதான் ஆக வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!