தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவில் இணைந்த ம.நீ.ம நிர்வாகி அனுஷா ரவி.. கமல்ஹாசன் மீதான குற்றச்சாட்டு என்ன?

dr anusha ravi: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பரப்புரை பிரிவு மாநில செயலாளர் அனுஷா ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துகொண்டார்.

Anusha ravi
Anusha ravi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 2:33 PM IST

கோயம்புத்தூர்:கோவையைச் சேர்ந்த பார்க் கல்வி குழுமங்கள் உரிமையாளரும், தொழிலதிபருமான அனுஷா ரவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு பரப்புரை பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடாததால் அனுஷா ரவி அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

இருப்பினும், தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஒரு மணிநேரத்தில், மத்திய இணையமைச்சர் எம்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அனுஷா ரவி தன்னை பாஜகவில் இணைத்துகொண்டார்.

இதையும் படிங்க: மன்சூர் கட்சியில் மன்சூரே இல்லையா? - "ஆடியோ ஆதாரம் இருக்கு" என எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details