சென்னை: திருவெற்றியூர், பெரியார் நகர் பகுதியில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக பகுதி செயலாளரும், திருவொற்றியூர் மண்டல குழு தலைவருமான தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், '' விஜய், சீமான் ஆகியோரால் உரசி பார்க்க இயலாத எஃகு இயக்கமாக திமுக இருந்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியோ அதிமுகவின் மூத்த தலைவர்கள் பற்றியோ பொதுமக்களை பேச வைக்க அதிமுகவால் முடியாது.
'ராமசாமி பூமி'
தமிழகத்தை ராமர் பூமியா அல்லது ராமசாமி பூமியா என கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்று தான் சொல்வோம். இங்கு ராமருக்கு இடமில்லை. அதற்கு சாட்சியாக தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என தமிழகத்தில் வெற்றி பெற்றோம். மற்ற எந்த மாநிலங்களிலும் இந்த வெற்றியை யாராலும் பெற முடியவில்லை.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழகத்திற்கு வந்தபோது சட்டம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான புத்தகத்தை படிக்க விரும்பினார். பல மாநிலங்களில் தேடியும் அந்த புத்தகம் கிடைக்காததால் தமிழகம் வந்தபோது சென்னை கன்னிமாரா நூலகத்தில் சோதனை செய்தபோது அங்கு அந்த புத்தகம் இருந்தது.
இதையும் படிங்க:உடல் மொட்டை மாடிக்கு வந்தது எப்படி? சவால் நிறைந்த தூத்துக்குடி சிறுவன் வழக்கு..!
ஆனால், அவருடைய உதவியாளர் அந்த புத்தகத்தை எடுக்க சென்றபோது அந்த புத்தகத்தை இரண்டு முறை ஒருவர் எடுத்து சென்றிருந்தது தெரிய வந்தது. அவர் யார் என்ன அறிந்து கொள்ள நேரு தேடியபோது அந்த புத்தகத்தை இரண்டு முறை எடுத்து படித்தவர் சி.என்.அண்ணாதுரை என தெரிந்தது. செல்வ செழிப்பில்லாத ஒரே கட்சியாக திமுக இருந்து வருகிறது. இங்கு இருப்பவர்கள் யாரும் செல்வ செழிப்புடன் இருக்கவில்லை. கட்சியில் பணியாற்றி கட்சியில் திறம்பட பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பளித்து என்னை போன்று அமைச்சராக்குவதை திமுக செயல் படுத்தி வருகிறது.
விஜய் அம்பேத்கர் ஆக முடியாது
அம்பேத்கர் படத்திற்கு ஒரு நாள் பூ வைத்து விட்டு வாழும் அம்பேத்கர் ஆக விஜயால் மாறிவிட முடியாது. ஒரு ரூபாய் நாணயத்தில் அம்பேத்கரின் படத்தை பொறிக்க அரும்பாடுபட்டவர் கலைஞர் தான். இந்து முன்னணி ராமகோபாலன் ஒருநாள் சென்னை கோபாலபுரம் வந்தபோது, அங்கு கலைஞருக்கு பகவத் கீதை புக்கை பரிசாக வழங்கினார். அந்த புத்தகத்தை பெற்று கொண்ட கலைஞர் உடனடியாக அவருக்கு கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
தமிழகத்தில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது பேரவையில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நிகரான எதிர்க்கட்சி இல்லை என தெரிவித்தார். ஆனால், அந்த இடத்தில் அண்ணாதுரை எந்த பதிலும் அளிக்கவில்லை. பதில் தெரிந்தும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் கலைஞரை பார்த்த அடுத்த நொடி கலைஞர் உடனடியாக எழுந்து பேசினார். கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக இருப்போம். பக்தவச்சலம் அவர்கள் எதிர்பார்த்தது போல எதிர் கட்சியாக இருப்பார்கள். அவர் ஆசைப்பட்டது நிறைவேறி விடும் என்ற அண்ணாவின் எண்ணத்தை சட்டப்பேரவையில் வெளிப்படுத்தியவர் கலைஞர் தான்.
துணை முதல்வர் உதயநிதி முதல்வரின் மகன் என்பதையும் தாண்டி, கலைஞரின் பேரன் என்பதையும் தாண்டி, தற்போது சனாதனத்தை எதிர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறார்'' என அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.