அரியலூர்:தமிழ்நாட்டின் சிமெண்ட் சிட்டி (Cement city) என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு 24 மணி நேரப் பிரசவ வார்டு, ரத்த வங்கி, எச்ஐவி பரிசோதனை மையம், உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.
காரணம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருப்பதால் இங்குள்ள பெரும்பாலான பொதுமக்களுக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டயாலிசிஸ் பிரிவினை மருத்துவ அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி தலைமை தாங்கினார். உடையார்பாளையம் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர்கள் ராஜவன்னியன், செந்தில்குமார் மற்றும் தலைமை செவிலியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.