தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

CPI(M) K.Balakrishnan: பிரதமர் மோடி தனது சொந்த முகத்தை மக்களிடம் காட்டி வாக்கு கேட்க முடியவில்லை, ராமர் என்ற முகத்தைக் காட்டி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என சிபிஐஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ செயலர் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐ செயலர் கே.பாலகிருஷ்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 12:00 PM IST

மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியில் செய்த சாதனைகள் குறித்து, ‘ஐந்தாண்டுகளில் 150 வெற்றிகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட, வணிகவரித் துறை, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மற்றும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி பெற்றுக் கொண்டாா்.

பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “மக்கள் நலனுக்காக, அடிப்படை பிரச்னைகளுக்காக எந்தவித சமரசமும் இன்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. எங்களது கட்சி, தனது சாதனைகளை புத்தகமாக வெளியிட்டு, மக்களை நேரடியாகச் சந்திக்கிறது. ஆனால், மத்தியில் ஆட்சி புரியும் பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த முகத்தை மக்களிடம் காட்டி வாக்கு கேட்க முடியவில்லை.

ஐந்தாண்டுகளில் 150 வெற்றிகள்’ புத்தக வெளியீட்டு விழா

ராமா் என்ற முகத்தைக் காட்டி, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். பாஜகவின் இந்த அரசியலுக்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. பக்தி வேறு, அரசியல் வேறு என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்.

தேர்லுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தேர்தல் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிா்ப்பை தெரிவித்து, தேர்தல் பத்திரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றது.

மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு, 19 மக்கள் விரோத மசோதாக்களை எந்தவித விவாதமும் இன்றி, நாணயமற்ற முறையில் மத்திய அரசு நிறைவேற்றியது. மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதால், இதுவரை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை.

எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்” என்றாா். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மோடி விவசாயிகளுக்கு முள்படுக்கை விரிக்கிறார்.. அன்பில் மகேஷ் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details