BJP leader Annamalai Slams MK Stalin கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை சூலூர் பகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், கோவை நாடாளுமன்ற மக்களவை வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டு, கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பொதுமக்களே மோடிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். உலகின் முக்கியமான பகுதியாக கோவை மாறும் வகையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும். 2024 முதல் 2029ஆம் ஆண்டு வரை பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதனால்தான் பிரதமர் மோடி 400 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று சொல்கிறார்.
மூன்றாவது முறை பாஜக ஆட்சியில் அமர்ந்தால், நிச்சயம் நதிநீர் இணைப்பு நடக்கும். குறிப்பாக, இந்தியாவில் 12 மாநிலங்கள் நதிநீர் இணைப்பை எதிர்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 1958ஆம் ஆண்டு பேசப்பட்டது ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டம். இத்திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி தேவைப்படும். அதை மாநில அரசால் ஒதுக்க முடியாது.
மத்திய அரசால்தான் ஒதுக்க முடியும். சூலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தத்தளித்து வரும் நிலை இருக்கிறது. நூல் சம்பந்தப்பட்ட தொழிலில் வியாபாரம் இரட்டிப்பாக மாற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மோடி ஆட்சியில் அதிகமாக பலன் பெற்றது கோவை, திருப்பூர் பகுதிகள்தான்.
கோவையில் இருந்து நேரடியாக மோடியிடமும், மத்திய அரசிடமும் பேசக்கூடிய ஒருவர் வேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தவுடன், மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சியினைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2024 தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் கட்சியை பார்க்காமல், பிரதமர் மோடிக்காக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறினார்.
நான் விநாயகர், தொண்டர்கள் முருகன்: தொடர்ந்து பேசிய அவர், "என்னால் 18 நாட்களில் கோவை தொகுதியில் முழுமையாக பயணித்து, எல்லா கிராமத்துக்கும் சென்று மக்களைச் சந்திக்க முடியாது. ஒரு பக்கம் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம், கோவை நாடாளுமன்றத் தொகுதியையும் பார்க்க வேண்டும்.
என் சார்பாக, நீங்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, ஒவ்வொரு மக்களிடமும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது எனது ஆசை. பிரதமர் மோடியை 400 எம்பிக்களுடன் ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. விநாயகரைப் போல நான் உங்களைச் சுற்றி வந்து விடுகிறேன். முருகனைப் போல நீங்கள் அனைவரையும் சந்தித்து விடுங்கள்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "தேசிய ஜனநாயகக் கூட்டணி கோயம்புத்தூரில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வாக்குகள் பெறும். இது குறித்து தற்போது எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு நான் பதில் கூறப் போவதில்லை. இது குறித்து ஜூன் 4ஆம் தேதி கேள்வி கேளுங்கள்" எனக் கூறினார்.
மணி அண்ட் கோ-வில் முதலமைச்சர்: கோவையின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கு தயாரா என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தது குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எஸ்.பி வேலுமணியைக் கொண்டு வந்து உட்கார வையுங்கள். நடைபெற்றுள்ள ஊழல் குறித்து 10 கேள்வி கொடுக்கின்றேன். செய்தியாளர்கள் அதை கேளுங்கள்.
2021 தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னாரே? இப்பொழுது இருவரும் அண்ட் கோ போட்டு இருக்கின்றனர். ஊழல் தடுப்புத்துறை இவர்கள் மீது போட்ட குற்றப்பத்திரிகை எங்கே போனது? கோவையில் திமுகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:திமுக நிறைவேற்றியதாக கூறும் தேர்தல் வாக்குறுதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?