கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேட்பாளர் அண்ணாமலை இன்று (ஏப்.16) சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் உணவு இடைவெளியின் போது, வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆனைமலை - நல்லாறு திட்டத்திற்குப் பெரிய எதிர்ப்பு இல்லை. 1958ல் போட்ட 2 ஒப்பந்தம். நம் ஒப்பந்தத்திற்குப் பிறகு கேரள அரசு அவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி தண்ணீரைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
நாமும் ஒப்பந்தத்தை நிறைவேற்றி தண்ணீரைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தவறி விட்டோம். இது கிட்ட தட்ட 10000 கோடி திட்டம். எனவே ஜூன் 4க்கு பிறகு மோடியைச் சந்தித்து, பேசி உறுதியாகச் செயல்படுத்தி ஆக வேண்டும். சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது. நீர்நிலை வற்றி உள்ளது. நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளது. அதனால், இதற்கு ஆனைமலை - நல்லாறு திட்டம் மட்டுமே தீர்வு" என்றார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி கோவையில் சாலை தடுப்பைத் தாண்டி சென்றது குறித்த கேள்விக்கு, "ராகுல்காந்தி சாலை தடுப்பைத் தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதிமீறல். அதுவே அண்ணாமலை என்றால் திமுகவும் கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள்.
மூத்த அரசியல் தலைவர் ராகுல்காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தைச் சொல்கிறது. இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயம். ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும்" என்றார்.
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து சென்ற பின்பு பாஜகவிற்கு பயம் வந்துள்ளதாகக் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, "ஸ்டாலினுக்கு தான் பயம் வந்துள்ளது. ராகுல்காந்தி வயநாட்டிற்குச் செல்லும்போது கம்யூனிஸ்ட் எதிர்த்து உள்ளனர். எல்லை தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இது தான் இந்தியா கூட்டணியின் நிலை.