தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்.28) அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கூட்டணி இல்லாமல் திமுகவை வென்று காட்ட சொல்லுங்க என எம்பி கனிமொழிக்கு சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை பேசுகையில், "தென் தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து கொள்கின்றேன் என்னிடம் விட்டுவிடுங்கள் என பிரதமர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்களை கொண்டு வந்து அடிக்கல் நாட்டியுள்ளார். புவியியல் அடிப்படையில் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது என்பது அதற்கு ஏதுவான இடம்.
பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளதால் பணிகள் விரைந்து முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். திமுக கட்சி என்றாலே அது ஸ்டிக்கர் ஒட்டும் கட்சிதான் என்பதை இன்று நிருபித்துள்ளனர். இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி என்பது முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு தான் வந்தது. அண்ணாதரை முதல்வராக இருக்கும்போது சில காரணங்கள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்றது.
இன்று இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு மீண்டும் வந்துள்ளது, அதற்கான அடிக்கல் நாட்டும் போது இது போன்ற சைனீஸ் ஸ்டிக்கர் ஒட்டுவது நியாயமா. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கனிமொழி மீது திடீர் பாசம் வந்துள்ளது. இது நாள் வரை திமுகவினர் கனிமொழிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, மதிக்கவில்லை. தேர்தல் வருவதால் பாசம் காட்டுகின்றனர்.