தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.டெக் செயற்கை நுண்ணறிவு படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவக்கம் - சென்னை ஐஐடி தகவல்! - IIT Madras

IIT Madras: சென்னை ஐஐடியில் புதிததாக துவக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு பி.டெக் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சென்னை ஐஐடி முகப்பு படம்
சென்னை ஐஐடி முகப்பு படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 7:06 PM IST

சென்னை: சென்னை ஐஐடியில் புதிததாக துவக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு பி.டெக் படிப்பில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது;இதற்கான சேர்க்கையை கூட்டு இடஒதுக்கீடு ஆணையம் (JoSAA) தற்போது நடத்தி வருகிறது என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். ஜேஇஇ மூலம் இதில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

பல்துறை அம்சங்களுடன் கணித அடிப்படைகள், தரவு அறிவியல் அல்லது ஏஐ, எம்எல் அடித்தளங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இப்பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும். 110 கோடி ரூபாய் நன்கொடையில் நிறுவப்பட்டுள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி மூலம் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சிறந்த ஏஐ-யை மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக விளங்கச் செய்து, தரவு அறிவியல் மற்றும் ஏஐ தொடர்பான கொள்கைகளை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இதன் இலக்காகும். பி.டெக் படிக்கும்போதே வேறுத் துறையை தேர்வு செய்தும் படிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பீச் அண்ட் லாங்வேஜ் டெக்னாலஜி (Speech and Language Technology), கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றில் தொடங்கி அப்ளிகேஷன்ஸ் இன் கண்ட்ரோல் அண்ட் டிடெக்சன் (Applications in Control and Detection), டைம் சீரிஸ் அனாலிசிஸ் (Time Series Analysis) வரை பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் ஆழமாக ஆராய முடியும்” என்று கூறியுள்ளது.

இந்த பாடத்திட்டம் குறித்து கூறிய சென்னை ஐஐடி இயக்குநரும், கணினி அறிவியல் ஆசிரியருமான காமகோடி, “ஏஐ என்பது பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளை உள்ளடக்கியதாகும். இத்துறையில் வெற்றிகரமாகத் திகழ பல்துறைத் தொடர்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்காகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பி.டெக்., படிப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற படிப்பு உலகிலேயே முதன்முறையாகும். அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள், நியாயமான மற்றும் பொறுப்பான ஏஐ ஆகியவற்றுக்கான பயன்பாட்டில் கவனம் செலுத்துவது இந்த பிடெக் பாடத்திட்டத்தில் அடங்கும். பல்வேறு களங்களில் ஏற்படும் சவால்களை சமாளிக்க தரவுப் பகுப்பாய்வு, ஏஐ நுட்பங்களைப் பயன்படுத்துதல், புதுமை மற்றும் தாக்கத்தை வளர்த்தல், ஏஐ மேம்பாட்டில் நேர்மையான மற்றும் பொறுப்பான கொள்கைகளை பின்பற்றுதல், தொழில்நுட்பத்தின் நெறிமுறை - சமமான வரிசைப்படுத்துதலை உறுதி செய்தல் ஆகியவையும் இதில் இடம்பெறும்” என்று காமகோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு; நாளை முதல் கலந்தாய்வு ஆரம்பம்! - TN DR Ambedkar Law University

ABOUT THE AUTHOR

...view details