சென்னை:ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), என்ஐடி(NIT) உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ (JEE) முதல் கட்டத்தேர்விற்கான முடிவுகள் வெளியானதில், மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதனால் கட்ஆப் (Cut-Off) மதிப்பெண்கள் உயருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ (B.E), பிடெக் (B.Tech) படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு, கடந்த ஜனவரி மாதம் 27, 29, 30 மற்றும் 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகியத் தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மாெழிகளில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 48 பேர் எழுதினர்.
இந்நிலையில், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் www.nta.ac.in, https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பிஆர்க், பி.பிளான் ஆகிய படிப்பிற்கான தாள் 2 முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், "தேசிய தேர்வு முகமை ஜேஇஇ முதல் பருவத்திற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவுகளில், இது வரையில் இல்லாத வகையில் பர்சன்டைல்ஸ் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. 2021 ஜனவரி பருவத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 33 எனவும், 2022-ல் 7 லட்சத்து 69 ஆயிரத்து 694 எனவும், 2023-ல் 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 மாணவர்கள் தேர்வு எழுதினர்.