ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளன. ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் செய்து வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 15 நாள்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதன்படி, தடசலட்டியைச் சேர்ந்த கெளரி (65), மாதி (75), மாரன் (60), ரங்கன் (80), இட்டரை கிராமத்தைச் சேர்ந்த கேலன் (50) மற்றும் மாவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரே (47) ஆகியோரின் உயிரிழப்புக்கு தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி தான் காரணம் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மூன்று கிராமங்களைச் சேர்ந்த முருகேசன் (47), காமாட்சி (48) மற்றும் லட்சுமி (45) ஆகியோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சத்தி, தாளவாடி, சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஊராட்சி இணை இயக்குனர் உமா சங்கர், பாதிக்கப்பட்ட இட்டரை, தடசலட்டி, மாவநத்தம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் ஆகியோர் வீடு வீடாகச் சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் பயன்படுத்தும் கிணறு, குளம், குட்டைகளில் குளோரின் தெளித்து சுத்தம் செய்தனர். வீடு வீடாக கிருமி நாசனி தெளித்து சுத்தப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவானது மக்கள் குடிநீராக பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீர், கிணற்று நீர், குட்டை நீர் ஆகிய இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிராம மக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்குமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கிராமங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் மூன்று கிராமங்களில் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:15 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. காதல் ஜோடி போக்சோவில் கைது! - pocso case