சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (26). கூலித் தொழிலாளியான சந்தோஷ் நுங்கு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி இருக்கிறார். அப்போது கால் இடறி கீழே விழுந்த சந்தோஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சந்தோஷின் உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உடனே, மருத்துவமனை தரப்பில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தோஷ் குமாரின் இதயத்தை சென்னை தனியார் மருத்துவமனையில் உள்ள 11 வயதான சிறுமிக்கு பொருத்துவதற்காக இன்று சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதற்காக ஏற்கனவே விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி அவசர ஊர்தி மூலம் பாதுகாப்பாக தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது.
சந்தோஷ்குமாரின் இதயம் மட்டுமல்லாமல், அவரது பிற உள்ளுறுப்புகளும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த சந்தோஷ் குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சேலம் அரசு மருத்துவமனை சார்பில் சந்தோஷ் குமாருக்கு அரசு மரியாதை நடத்தப்பட்டு உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ரூ.1,000.. வரும் கல்வியாண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் - சிவ்தாஸ் மீனா தகவல்! - Tamil Pudhalvan Scheme