மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று (ஏப்.02) இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருந்தது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளைப் பார்த்ததில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. செம்மங்குளம் அருகில் சிறுத்தை சென்று பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே நிலைமையின் விபரீதம் புரியாமல் சிறுத்தையை வேடிக்கை பார்ப்பதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே, காவல் துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, அப்பகுதி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறுத்தை பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் கூறைநாடு, தெற்கு சாலிய தெரு, வடக்கு சாலிய தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடர்ந்த இடங்களில், பழங்காவிரி கரை பகுதிகளில், வனத்துறையினர் வலைகள் மற்றும் கயிறுகளுடன் தீவிரமாகச் சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு என்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், சீர்காழி வன அலுவலர் ஜோசப் டேனியல், திருச்சி உதவி வன பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.