சென்னை:சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், ஆயுதங்கள், அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்களை கண்டுபிடிப்பதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கே 9 எனப்படும் மோப்ப நாய்கள் பிரிவு ஒன்று உள்ளது. அதில் தற்போது ஆர்லி, ஆரியோ, ஸ்னோ பாய், ராக் என்ற 4 மோப்ப நாய்கள் உள்ளன.
இவை வெடி மருந்துகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றைத் திறமையாக கண்டுபிடிக்கும் திறமை கொண்டவை. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கே 9 மோப்ப நாய் பிரிவுக்கு மேலும் 3 மோப்ப நாய்கள் வரவிருக்கின்றன. இதனால், சுங்கத்துறை மோப்ப நாய் கே 9 பிரிவில் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 4 இல் இருந்து 7 ஆக அதிகரிக்க உள்ளது.
36 வாரங்கள் சிறப்பு பயிற்சி: இதற்காக இந்திய சுங்கத்துறை தலைமையகம், 3 மோப்ப நாய் குட்டிகளைத் தேர்வு செய்து பயிற்சிக்காக பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள கஸ்டம்ஸ் கனெய்ன் சென்டர் (Customs Canine Center) என்ற பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, இந்த 3 மோப்ப நாய்களும் 36 வாரங்கள் சிறப்பு பயிற்சியை எடுத்துவிட்டு வருகின்ற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் இணைகின்றன.