நீலகிரி:குன்னூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் டைகர்ஹில் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கார்த்திக் (35) - அஞ்சலி (28). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது, இருவரும் டைகர்ஹில் அருகேயுள்ள சிங்காரா பகுதியில் உள்ள தனியார் காட்டேஜில் பணி புரிந்து வருகின்றனர். அப்படி பணி புரியும் அவர்களுக்கு அங்கேயே தங்கி வேலை பார்க்கும் வகையில், வீட்டு வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கார்த்திக் காட்டேஜ் உரிமையாளரின் காரை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இரண்டு வயது மகள், காட்டேஜ் முன்புறம் உள்ள சிமென்ட் கட்டடத்தால் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு, உணவு வழங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாகக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து, தண்ணீருக்குள் தத்தளித்துள்ளார். அதனைக் கண்ட பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு, தங்களது வாகனத்தின் மூலம் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:இறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க குழு!
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக, மேல்குன்னூர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கார்த்திக் - அஞ்சலி தம்பதியினருக்கு திருமணமாகி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அக்குழந்தை என்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று, குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு, வீட்டில் தேவைக்காக தண்ணீர் நிரப்பி வைத்திருக்கும் தண்ணீர் வாலியில் விழுந்து உயிரிழப்பு என சில சம்பவங்கள், அடிக்கடி நேர்ந்து வருகிறது. அதனால், குழந்தைகள் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கும் பகுதிக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும், தேவையான நேரங்களில் மட்டும் அண்டா, வாலி போன்ற தண்ணீர் நிரப்பி வைத்து உபயோகித்துக் கொள்வதைப் பெற்றோர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.