திண்டுக்கல்:பழனியில் 18ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த 'செப்பேடு' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கணியர் ஞானசேகரன் உதவியோடு ஆய்வு செய்தார்.
இந்த செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, “பழனியைச் சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழனிமலைப் பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முசுட்டாக்குறிச்சி, பெத்தானேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்னக்குளம் ஆகிய ஆறு ஊர்களை வரிகள் நீக்கி, திருக்காலச் சந்தி காலபூஜையில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவை தடைபடாமல் நடப்பதற்கு கொடை அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. செப்பேட்டின் முகப்பில் மயில், சூரிய, சந்திரர்களுக்கிடையே வேல், வலது ஓரத்தில் அரசரின் உருவம் ஆகியவை கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.