மெல்பேர்ன்:டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. அதன்படி ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்கா ஓபன், விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டிற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர்கள் மற்றும் வீரங்கனைகள பங்கேற்றனர். 21 நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி இன்றுடன் (ஜன.28) நிறைவு பெற்றது.
இந்த நிலையில் நேற்று (ஜன. 27) நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சிமோன் பொலெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹன் போபண்ணா ஜோடி 7-க்கு 6, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி ஜோடிகளான சிமோன் பொலெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தனது 43வது வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளார் போபன்னா. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அதிக வயதான நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இருக்கிறார். மேலும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதைப் பலருக்கும் புரிய வைத்து இருக்கிறார் போபன்னா.
இதனையடுத்து அவரது வெற்றிக்குப் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ”வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்திரேலியா ஓபன் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துக்கள்.
எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்கப் பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்புதான் மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருதை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது X பக்கத்தில் “ உங்களுக்கான தருணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போபண்ணாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
43 வயதில் ஆஸ்திரேலிய ஓப்பன் போன்ற பிரமாண்ட மேடையில் அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து கனவு காணுங்கள். எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள். உங்களுக்கான நேரம் வரும்போது அசத்திவிடுங்கள்!" என சச்சின் போபண்ணா பற்றி எழுதியிருக்கிறார். இப்படியாக பலரும் தங்களது வாழ்த்துகளை போபண்ணாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"இது நான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக மோசமான ஒன்று" - அரையிறுதி தோல்விக்கு பிறகு நோவக் ஜோகோவிச்!