மதுரை:தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே கோட்டங்களுக்கிடையே ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி மதுரையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) துவங்கியது. மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் முதல் நாள் கபடி போட்டிகளை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.நாகேஸ்வரராவ் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் சென்னை, சேலம், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் மோதின. திருச்சி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அதில், சேலம் அணி 13 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது.
கபடி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) அடுத்து நடைபெற்ற போட்டியில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி 26 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மதுரை அணியை எதிர்த்து திருவனந்தபுரம் அணியால் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று (ஆக.9) காலை அமர்வில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், திருச்சிராப்பள்ளி 35 - 15 என்ற கணக்கில் திருவனந்தபுரத்தையும், மதுரை 45 - 21 என்ற கணக்கில் சென்னையையும் வென்றன.
இறுதி ஆட்டத்தில் மதுரை அணி 30 - 24 என்ற கணக்கில் திருச்சிராப்பள்ளி கோட்டத்தை தோற்கடித்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் கோப்பையை மதுரை அணியின் கேப்டன் சுடரொளி பாண்டியன் பெற்றார். மதுரை அணியின் கண்ணன் போட்டியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை வென்றார். மேலும், மதுரை அணியின் சுடரொளி பாண்டியன் மற்றும் திருச்சி அணியின் வடிவேல் ஆகியோர் சிறந்த ரைடர் மற்றும் சிறந்த டிஃபண்டருக்கான விருதுகளைப் பெற்றனர்.
மதுரையில் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு படை கபடி அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறைவு விழாவில் மதுரை கோட்டத்தின் முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் முகமது சுபைர், கோட்ட பாதுகாப்புப் படை ஆணையர் ஏ.கே.கார்த்திகேயன், துணை ஆணையர் எம்.சிவதாஸ், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன், உதவி ரயில் பாதுகாப்பு அதிகாரி டி.பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்.. இந்தியாவுக்கு 6-வது பதக்கம்!