கான் யூனிஸ்:இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதற்கட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை ஹமாஸ் இயக்கத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். பதிலடியாக 15 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த இஸ்ரேல் தாக்குதலில் 48,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்ப்ட்டனர்.
இதனிடையே அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியின்பேரில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்ட போர் நிறுத்தத்தின்படி 6 வாரங்களுக்கு பரஸ்பரம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. 6 வார கெடுவானது இந்த வார இறுதியில் முடியவடைய உள்ளது.
இதனையடுத்து இருதரப்பிலும் ஒப்புக் கொண்டபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்திருக்கிறது. இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், எகிப்திய நடுநிலையாளர்கள் உதவியுடன் செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவின் வளர்ச்சி பிற நாடுகளுக்கு முன் மாதிரியாகும்...தலைமை பொருளாதார ஆலோசகர் பெருமிதம்!
பிணைக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட அதே நேரத்தில், இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் கொண்ட செஞ்சிலுவை சங்க வாகனம் இஸ்ரேலில் இருந்து கிளம்பி மேற்குக் கரை நகரான பெய்டுனியா நகருக்கு வந்தது. அங்கு காத்திருந்த பாலஸ்தீனியர்களின் உறவினர்கள், தங்கள் உறவினர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். பாலஸ்தீனயர்கள் விடுவிக்கப்பட்ட போது இஸ்ரேல் சிறை அதிகாரிகள் கொடுத்த டி சர்ட்களை சிலர் தீ வைத்துக் கொளுத்தினர்.
ஹமாஸ் தரப்பில் இருந்து பிணைக் கைதிகளை திரும்ப ஒப்படைக்கும் போது கொடூரமான முறையில் நடந்து கொண்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி இருந்தது. இதனால் 600 பாலஸ்தீனியர்களை சிறையில் இருந்து விடுவிக்க இஸ்ரேல் தாமதப்படுத்தியது. முதல்கட்ட போர் நிறுத்தத்தின்படி இருதரப்பிலும் பரஸ்பரம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போர்நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்த மார்ச் முதல் வராத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.