மதுரை:சர்வதேச மருத்துவச்சிகள் தினம் இன்று (மே 5) கொண்டாடப்படும் நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரது சார்பிலும் மருத்துவச்சிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் குழந்தை பிறப்பில் முக்கிய பங்காற்றும் இந்த மருத்துவச்சிகள் யார்? இவர்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்? இவர்கள் சந்திக்கும் பிரச்னை மற்றும் சவால்கள் என்ன என்பது உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
யார் இந்த மருத்துவச்சிகள்?ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு பரிசோதனை மேற்கொள்ளச் செல்லும் நேரத்தில் இருந்து, அந்த கர்ப்பிணி குழந்தை பெற்று, தாய் சேய் நலத்துடன் வீடு திரும்பும் வரை பாதுகாத்து, தொடர்ந்து அந்த குழந்தையின் தடுப்பூசிகள் உள்ளிட்ட ஆரம்பகட்ட மருத்துவத் தேவைகள் முடியும் வரை கண்காணித்து பாதுகாப்பவரே மருத்துவச்சி.
இந்த மருத்துவ சேவையாற்ற, அவர்கள் தனிப்பட்ட பயிற்சி பெற்று அங்கீகாரம் பெற வேண்டும். அது மட்டுமின்றி, ஒரு கர்ப்பிணிக்கு அவர்கள் சேவையாற்றும் நேரத்தில் கனிவுடனும், பொறுமையுடனும், அறிவாற்றலுடனும் செயல்பட வேண்டும் என்பதே இந்த துறையில் பணியாற்றும் மருத்துவச்சிகளுக்கான முதல் தகுதி என சர்வதேச மருத்துவச்சிகளுக்கான கூட்டமைப்பு (International Confederation of Midwives) கூறுகிறது.
மருத்துவத்துறைக்கு மருத்துவச்சிகளால் என்ன பயன்?உலக அளவில் ஒவ்வொரு மகப்பேறு நிகழ்வின்போதும் மருத்துவரின் பணியை விட இவர்களின் பணி அளவற்றது. மருத்துவருக்கும், நோயாளிக்கும் இடையே பாலமாக இருந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார்கள் இவர்கள்.
இந்த துறையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் நிலையில், பெண் ஊழியர்களுக்கான பற்றாக்குறை என்பது உலக அளவில் 9 லட்சமாக இருக்கிறது. மேலும், இந்த மருத்துவச்சிகளின் அயராத உழைப்பால், உலக அளவில் பெரும்பாலும் தாய், சேய் இறப்பு விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என சர்வதேச மருத்துவச்சிகளுக்கான கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. குழந்தை பிறப்பு காலகட்டத்தை நிர்வகிப்பதற்காக மட்டுமே தயார்படுத்தப்படும் இவர்கள், மருத்துவத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
மருத்துவச்சிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறதா?ஒரு குழந்தை முதல் முறையாக இந்த பூமியில் பிறக்கும்போது கையில் ஏந்தும் மருத்துவச்சிகள், சமூகத்தாலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் முறையாக அங்கீகரிக்கப்படுகிறார்களா என கேட்டால் அது கேள்விக்குறிதான்.
ஏராளமான மருத்துவச்சிகள், போதிய உதியம் மற்றும் சலுகைகள் இல்லாமல் நேரம் காலமின்றி பணியாற்றுகிறார்கள். அரசுத் துறையில் வீடு தேடிச் சென்று தாய், சேய் இருவரையும் கவனிக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது கிடைக்கப்பெற்று வரும் அங்கீகாரத்தில் இருந்து மேலும் அது அதிகரிக்க வேண்டும் என்பது கோரிக்கை அல்ல. உலக நாடுகளின் தேவை. இல்லை என்றால், இந்த துறையில் ஆள் பற்றாக்குறை என்பது உயர வாய்ப்பு இருக்கிறது.