மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகை தான் பிரண்டை. இதற்கு, வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் உண்டு. Cissus quadrangulars என்ற தாவரவியல் பெயரை கொண்டு அழைக்கப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படும் பிரண்டை கொடி, அதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
வீட்டில் எப்போதாவது வைக்கப்படும் பிரண்டை துவையலுக்கு மவுசும், சுவையும் அதிகம் என்றால் மிகையில்லை. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உள்ளது. கீல்வாதம் உள்ள எலிகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மற்ற மருந்துகளை விட முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் பிரண்டை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக Journal of clinical and cellular immunology இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
- பிரண்டை வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்துகள், பிளவனாய்டு, கரோட்டீன், டேனின் உள்ளிட்ட சத்துக்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரிசெய்வதில் பிரண்டைக்கு இணையாக எந்த மருந்தும் இல்லை என இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- உடலில் வாயு தொடர்பான நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும் அபாயம் உள்ளது. இந்த மாதிரியான சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியை தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.
- பண்டைய காலங்களிலிருந்து, வலியைக் குணப்படுத்தவும், மாதவிடாயை ஒழுங்குபடுத்தவும், எலும்பு முறிவுகளை சரிசெய்யவும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர் என NCBI ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- பசியின்மை, வயிறு உப்பசம், பேதி, உடல் பருமன், செரிமானம், வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது.
- வாரத்திற்கு ஒருமுறை பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டு வர, வாய்ப்புண், வயிற்றுப்புண், ஊளைச்சதை போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும், இது உடலில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கிறது.
- பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து காயவைத்து பொரித்து சாப்பிட்டால் நாக்கில் சுவையின்மை, பசியின்மை போன்றவை குணமாகும்.
- வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது. அதனால், மாதத்திற்கு ஒரு முறை அல்லது பிரண்டையில் துவையல் செய்து சப்பிட்டு வந்தால், குடல் புழுக்கள் நீங்கும். கூடுதலாக, பிரண்டை சுளுக்கிற்கு சிறந்த மருத்தாக இருக்கிறது.
- எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட வேண்டும். இப்படி செய்வதால், அடிப்பட்ட வீக்கம், எலும்பு முறிவிற்கு நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை காயவைத்து அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில், நீர்விட்டு கலந்து பூசி வர, எலும்புகள் கூடி வலுப்பெறும்.
- இரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைப்பதில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி, முதுகுவலி பிரச்சனைக்கு பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: