சென்னை: வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த இரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதில் ஒன்றுதான் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் ’கூலி’ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.
தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாஹிர், கன்னடாவில் இருந்து உபேந்திரா என பல மொழி நடிகர்கள் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதைத்தவிர பாலிவுட் புகழ் அமீர்கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தங்களது சமூக ஊடகங்களில் ஜனவரி 12ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டது.
ரசிகர்கள் மத்தியில் அந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில் ஜனவரி 14ஆம் தேதி அதாவது பொங்கல் பண்டிகை அன்று மாலை 6 மணி அளவில் ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். புதிதாக வெளியிடப்படும் இந்த டைட்டில் டீசரானது வழக்கம்போல இணையத்தில் வெளியிடப்படாமல் திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை, கோயம்புத்தூர் என தமிழ்நாட்டின் சில நகரங்களிலும் பெங்களூர், திருவனந்தபுரம், பாலக்காடு, மும்பை போன்ற நகரங்களிலும் உள்ள திரையரங்குகளில் மாலை 6 மணி அளவில் திரையிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த டைட்டில் டீசர் வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ’பேட்ட’, ’எந்திரன்’, ’அண்ணாத்த’, ’ஜெயிலர்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் ’ஜெயிலர்’ திரைப்படம் மற்ற அனைத்து படங்களையும் விடவும் வசூல் ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். 2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அதுவரை இருந்த வசூல் சாதனைகளையெல்லாம் முறியடித்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க :வாடிவாசலுக்கு பின் வெற்றிமாறன் இயக்கும் படம்.. மீண்டும் இணையும் தனுஷ்..
இந்த படத்தை சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என அதன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருந்தார். சூப்பர் சகா என பெயரிடப்பட்டுள்ள இந்த டைட்டில் டீசர் ஒருவேளை ஜெயிலர் 2 படத்தின் டீசராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.