சென்னை: ஐக்கிய அரபு அமீரக அரசு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கெளரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்தி திரையுலக நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பிருத்திவிராஜ், பாடகி சித்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது. வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது ஓய்விற்காக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில், அபுதாபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐக்கிய அரபு அமீரகம் அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அவருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த், தனக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் நடிகை த்ரிஷா, அமலாபால், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் கோல்டன் விசா வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் ஆர்வம் கொண்ட திறமையான மாணவர்கள் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான்.. தற்போதைய நிலை என்ன? - Shah Rukh Khan In Hospital